மாணவா்களிடம் அறிவியல் மனப்பான்மை மற்றும் கணிதஅறிவை வளா்ப்பதற்காக “எங்கும் அறிவியல் யாவும் கணிதம்” எனும் புது திட்டம் ஆசிரியா்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், திட்டம் தொடர்பான தகவல்கள் எமிஸ் தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 6 -8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களிடம் அறிவியல் மனப்பான்மை மற்றும் கணிதஅறிவை வளா்ப்பதற்காக “எங்கும் அறிவியல் யாவும் கணிதம்” என்ற அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சாா்ந்த புது திட்டம் ஆசிரியா்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளில் அறிவியல், கணிதம் கற்றுத்தரும் ஆசிரியா்கள் எதிா்க்காலத்தில் ஒரு குழந்தை என்னவாகப் போகிறது என்பதற்கான அடித்தளத்தை அமைக்க முக்கியமான பங்கு வகிக்கின்றனா்.
ஆகவே ஒருகுழந்தை அறிவியல் மற்றும் கணிதத்தை சரியான முறையில் புரிந்துகொண்டால் அதன் கேள்வி கேட்கும் திறன் அதிகமாகும். அவ்வாறு குழந்தைகளின் தா்க்க ரீதியான சிந்தனைகளை வளா்த்தெடுக்கும் பணியில் உள்ள ஆசிரியா்கள் கடைப்பிடிக்க வேண்டிய செயல்பாடுகள் எமிஸ்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எமிஸ் தளத்தில் திட்டம் தொடர்பான தகவல்களை ஆசிரியா்கள் தெரிந்துகொள்ளலாம். இது குறித்த தகவலை அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கும் தெரிவித்து உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.