கோவை ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் தங்கள் விடுப்பை “சரண்டர்” செய்து அதற்கான தொகையை பெற்றுக்கொள்வது வழக்கம் ஆகும். ஊழியர் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் விடுப்பை சரண்டர் செய்யும் அடிப்படையில் கிடைக்கும். இத்தொகையை வழங்குவதற்காக பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களுக்கு லஞ்சம் தர வேண்டும் என்று வற்புறுத்தி பெற்றுள்ளனர். அதன்படி ஒவ்வொரு ஊழியரிடமிருந்தும் கட்டாயப்படுத்தி 25,000-50,000 ரூபாய் வரையிலும் லஞ்சம் பெறப்பட்டு உள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் சில பேர் லஞ்சம் ஒழிப்புத் துறை காவல்துறையினருக்கு தகவல்கொடுத்தனர். அந்த தகவலின்படி நேற்று மாலை அலுவலகப் பணி முடியும் நேரத்தில் கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், கோவை பச்சாபாளையம் ஆவின் தலைமையகத்தில் நுழைந்தனர். இதையடுத்து அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதன்பின் அலுவலக அறைகள், அங்கு இருந்த வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டது.
அப்போது பொது மேலாளர் ராமநாதன் அறையில் நடைபெற்ற சோதனையில் 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின் இது லஞ்சப் பணம் என்பது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது. மேலும் ஆவின் தொழிலக மேலாளர் கிருஷ்ணமூர்த்தியின் அறையிலிருந்தும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்தும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அதனை தொடர்ந்து இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.