வாட்ஸ் அப்பில் ஆர்டர் எடுத்து போதைப் பொருட்களை விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகரில் இருக்கின்ற ஒரு மஹாலில் அனுமதி இன்றி டி.ஜே. நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தில் வசித்த பிரவீன் என்பவர் அதிகளவு போதைமருந்து உபயோகித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மற்றும் ஊழியர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வணிக வளாகம் அருகில் வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பதாக திருமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இத்தகவலின் அடிப்படையில் அண்ணாநகர் துணை ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னும் பின்னும் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகப்பட்ட காவல்துறையினர் அவரை சோதனை செய்து பார்த்தபோது போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன்பின் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அயனாவரத்தில் வசித்த 28 வயதுடைய ஸ்ரீகாந்த் என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் 26 வயதுடைய சாகுல் ஹமீத், கோடம்பாக்கத்தில் வசித்த இளம்பெண் 24 வயதுடைய டோக்கஸ் ஆகியோர் போதை மாத்திரை மற்றும் ஸ்டாம்புகளை விற்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது அவர்கள் வாட்ஸ அப் மூலம் ஆர்டர் எடுத்து நேரில் வரவழைத்து விற்பனை செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள், ஸ்டாம்புகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார்கள்.