சிறுமியை தாயாக்கிய நபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பாலக்கொல்லையில் சங்கர்(20) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சங்கர் அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு விறகு எடுக்கச் சென்ற சிறுமியை சங்கர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என சங்கர் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் 4 மாத கர்ப்பிணியான சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சங்கரிடம் கூறியுள்ளார். அதற்கு சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விருதாச்சலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கில் நடைபெற்று கொண்டிருக்கும் போதே சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு 2,000 ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.