ஈரானில் 10 அடுக்குமாடி வர்த்தக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் நாட்டின் தென்மேற்கில் குஜஸ்தான் மாகாணத்தில் அபடான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 10 அடுக்கு மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மெட்ரோபோல் என பெயரிடப்பட்ட கட்டிடத்தின் கட்டுமான பணிகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. இந்த வர்த்தகத்தை சுற்றி மருத்துவ வளாகங்களும், அலுவலகங்களும் செயல்பட்டு கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென கட்டிடம் சரிந்து இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மீட்பு பணியில் இதுவரை 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 35 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்தை முன்னிட்டு பேரிடரில் உயிரிழந்த நபர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று ஈரான் அரசு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டிட உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.