மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயி விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கால்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஐயப்பன் என்பவர் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் விநாயகர் கோவில் அருகே திடீரென ஐயப்பன் விஷம் குடித்துவிட்டார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் விஷ பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிலர் தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐயப்பன் கூறியுள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஐயப்பனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ஐயப்பன் எழுதிவைத்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில், கடந்த 1953 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்த எனது 50 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமித்தனர். அவர்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐயப்பன் தனது மகனுக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில், அன்பு மகனுக்கு…. நமக்கு சொந்தமான இடத்தை மீட்டு விற்பனை செய்து 2 லட்ச ரூபாய் பணத்தை இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்கு வழங்க வேண்டும். தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அந்த பணத்தை அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.