ஒருவர் 5 வருடங்களாக போராடி ரயில்வே துறையிடம் இருந்து தன்னுடைய பணத்தை திரும்பப் பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியில் என்ஜினீயரான சுஜித் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது ஊரிலிருந்து டெல்லிக்கு செல்வதற்கு ரயில் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார். இவர் ஜூலை 2-ஆம் தேதியன்று பயணம் செய்வதற்காக முன் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுஜித் சாமி ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்துள்ளார். எனவே ரயில்வே நிர்வாகம் 765 ரூபாய் மதிப்புள்ள ரயில்வே டிக்கெட்டுக்கு 665 ரூபாய் திரும்ப கொடுத்துள்ளது. இதில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணம் 65 ரூபாய் போக 35 ரூபாய் சேர்த்து பிடித்துள்ளது.
இதனால் சுஜித் சாமி தனக்கு சேரவேண்டிய பணத்துக்காக ரயில்வே நிர்வாகம், ஐஆர்சிடிசி, சேவை கட்டணத் துறை, நிதியமைச்சகம் உள்ளிட்ட துறைகளுக்கு கடிதங்கள் எழுதி அனுப்பியுள்ளார். இவர் கடந்த 5 வருடங்களாக தனது 35 ரூபாய்க்கு ஆக போராடியுள்ளார். இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் 2.91 லட்சம் பேருக்கு பணத்தைத் திரும்பத் தருவதாக அறிவித்துள்ளது. இதற்காக 2.98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சுஜித் சாமி தன்னால் லட்சக்கணக்கான பேர் பயன் அடைவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.