நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால் கே எஸ் அழகிரி அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை பிடிப்பதற்கு தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிக்கும் முன்னாள் மந்திரி நிதி துறை அமைச்சரும் மூத்த தலைவருமான சிதம்பரத்திற்கும் இடையே திமுக ஒதுக்கீடு நாடாளுமன்ற மாநிலங்களவை பதவி பிடிப்பதற்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த பதவியை பிடிப்பதற்கு இரண்டு பேரும் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் கடைசியில் ப.சிதம்பரத்திற்கு சோனியா காந்தி கிரீன் கார்டு கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். கடைசிவரை போராடிய கே எஸ் அழகிரிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மேலும் கே எஸ் அழகிரி பொருத்தவரை பஞ்சாயத்து தலைவர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என அக்கட்சியின் அடிமட்டத்திலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்தவர். இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கின்றார்.
இவரது தலைமையில் தமிழகத்தில் எம்பி தேர்தலிலும் எம்எல்ஏ தேர்தலிலும் காங்கிரஸிற்கு குறிப்பிட்ட வெற்றியும் கிடைத்துள்ளது. இதனால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என கே எஸ் அழகிரி எண்ணினார். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கே எஸ் அழகிரியை பொறுத்தமட்டில் இந்த மாதிரி கடைசி நேரத்தில் ஏமாற்றத்தை சந்திப்பது இது மூன்றாவது தடவையாகும். 1980 சட்டமன்ற தேர்தலில் முகையூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த போதும் கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றப்பட்டார். அதேபோல 1984 சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சிவாஜி மன்றத்தினர் பிடிவாதமாக அந்த தொகுதியை கேட்டதால் கடைசி நேரத்தில் வாய்ப்பு பறிபோனது. அதேநேரம் 1991 ,1996 ஆகிய இரண்டு முறை எம்எல்ஏவாக 2009 ஆம் வருடத்தில் எம்பி ஆகவும் வெற்றி பெற்றுள்ளார். ஒரு காலத்தில் ப சிதம்பரத்தின் சிஷ்யர் ஆக இருந்தவர்தான் கே எஸ் அழகிரி. ஆனால் தற்போது நடந்த போட்டியில் குரு (ப.சிதம்பரம்) வென்றிருக்கிறார் என்பதே நிதர்சனம்.