Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உஷார்: தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்க … சிக்கிய இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!

திருச்சி: புத்தூர் அருகே தாகத்திற்குத் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து, 10 சவரன் செயின் பறித்த இளைஞருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி புத்தூர் கனரா வங்கி காலனியைச் சேர்ந்தவர் சுபா (40). 2014ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி வீட்டின் முன்பு சுபா நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர், தனக்குத் தாகமாக உள்ளதாகக் கூறி குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதையடுத்து சுபா வீட்டிற்குள் சென்று சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளார். தண்ணீரைக் குடித்த இளைஞர் சொம்பை திருப்பிக் கொடுப்பதுபோல் கொடுத்து, திடீரென சுபாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி சுபா கழுத்திலிருந்த 10 சவரன் செயினை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உறையூர் காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து கரூர் அருகே சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் (28) என்ற இளைஞரைக் கைதுசெய்தனர். அதன் பிறகு அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

செயின் பறித்த இளைஞர்

இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி கிருபாகரன் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து ராஜேஷ் குமாருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Categories

Tech |