மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா நகரில் உள்ள நியூ தமிழ் காலனி பகுதியில் நாகம்மா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா (30) என்ற மகள் இருக்கிறார். இவர் ஹோம் கார்டாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரூபா ஏதோ சில காரணங்களுக்காக தன்னுடைய வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக ரூபாவுக்கு திருமணமாகியுள்ளது. இவருக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரூபா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து கடந்த 5 வருடங்களாக தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென நாகம்மா மற்றும் ரூபா குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக நாகம்மாவுக்கும், ரூபாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை நடந்து நாகம்மாவும், ரூபாவும் வீட்டிலிருந்து 4 நாட்களாக வெளியே வராமல் இருந்துள்ளனர். இவர்களுடைய வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகம்மா வீட்டில் சோதனை செய்ததில் ரூபா சடலமாக கிடந்ததும், ரூபாவின் சடலத்துடன் 4 நாட்களாக நாகம்மா இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் ரூபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் ரூபாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.