தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக அளவு யானைகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் மனிதர்கள் செயல்பாடு அதிகமாக இருப்பதால் யானைகள் ஊருக்குள் நுழைந்து பல்வேறு சிரமங்களை ஏற்படுத்திவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் விவசாய நிலங்களும் பெரிதும் நாசம் ஆகிவிடுகிறது. இதனைத் தடுப்பதற்கு விவசாயிகள் மின்வேலிகள் என்ற விஷத்தை கையில் எடுக்கின்றனர். ஆனால் அது வேறு மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இது தொடர்பாக கோவை வனம் சந்திரசேகர் கூறுகையில், யானைகளுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருப்பது மின் வேலிகள் மட்டும் தான். கோவையில் சோலார் வேலிகள் என்ற பெயரில் நேரடி மின்சாரத்தை தான் வேலிகளில் விவசாயிகள் செலுத்துகின்றனர். அது யானைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. விலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே மின் வேலி அமைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருந்தாலும் இதனை யாரும் சரியாக பின்பற்றுவதில்லை.
சோலார் வேலிகள் அமைப்பதால் யானைகளுக்கு ஆபத்து நேராது என்பது கவனிக்க வேண்டிய ஒன்றுதான். மேலும் யானைகளின் தந்தத்திற்காக ஆனைகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யானைகள் வேட்டையாடும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வேலிகள் அமைப்பது யானைகளுக்கு பேராபத்தை ஏற்படுத்துகிறது. வீச்சு வேலிகள் கோவை பகுதிகளில் அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு மூலமாக யானைகளுக்கு பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை கடித்துத் தின்ன முயற்சிக்கும்போது யானைகளின் வாய் மற்றும் நாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்படுகிறது. அதனால் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அதனால் இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வனத்துறை, மின்சாரத் துறை மற்றும் காவல் துறை என அரசு இயந்திரத்தின் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.