நடிகர் ஜானி டெப்பை எதிர்த்து அவரது முன்னாள் மனைவியான ஆம்பர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அதற்கான தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது.
நடிகர் ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர், ஆம்பர் ஹேர்ட் என்ற நடிகையை காதலித்து கடந்த 2015 ஆம் வருடத்தில் திருமணம் செய்த நிலையில், 2017-ஆம் வருடத்தில் விவாகரத்து பெற்றார். இதனைத்தொடர்ந்து 2019-ஆம் வருடத்தில் ஒரு பிரபல பத்திரிக்கையில் ஆம்பர் எழுதிய கட்டுரையில் தன் திருமண வாழ்க்கை மற்றும் அதற்கு முன்பாகவும் பல பாலியல் தொல்லைகளை அனுபவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த கட்டுரை பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, பலரும் ஜானியை கடுமையாக விமர்சித்தனர். அதன் பின் அவரின் திரைப்பட வாய்ப்புகளும் பறிபோனது. இதையடுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த, ஜானி தன் பெயரை கெடுக்கும் நோக்கோடு ஆம்பர் இவ்வாறு நடந்து கொள்வதாக அவர் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார்.
உடனே, ஆம்பரும், அவர் மீது பாலியல் தொல்லை மற்றும் குடும்ப வன்முறை குறித்த வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். சமீப வருடங்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்குகளுக்கான தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் நடிகர் ஜானி மீது எந்த தவறும் இல்லை என்றும், அவரின் பெயரை கெடுக்கும் நோக்கோடு ஆம்பர் கட்டுரை எழுதியிருக்கிறார் என்றும் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்றும் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வெளியிட்டது. இது மட்டுமல்லாமல் பொய்யாக வழக்கு தொடர்ந்ததால் ஆம்பர் 80 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில் அனைத்து பெண்களுக்கும் இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவு என்று கூறிய ஆம்பர், மேலும் தெரிவித்ததாவது, இன்று நான் வார்த்தைகளால் விளக்க முடியாத வகையில் ஏமாற்றமடைந்திருக்கிறேன். மலை போன்ற அளவிற்கு ஆதாரங்கள் இருந்தது. எனினும், ஆதிக்கம் மற்றும் அதிகாரமுடையவராக என் முன்னாள் கணவர் இருப்பதால் அந்த ஆதாரங்கள் தகுந்ததாக இல்லை. இது என் மனதை உடைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.