காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த குஜராத் மாநில செயல் தலைவர் ஹார்திக்படேல் சென்ற மே 19ஆம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் தடையாக இருக்கிறது எனவும் மத்திய அரசின் பல நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக உள்ளது எனவும் அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து ஹார்திக்படேல் ஜூன் 2ஆம் தேதி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. அந்த வகையில் இன்றைய தினம் ஹார்திக்படேல் பா.ஜ.க.வில் இணைந்தார்.
இதற்கு முன்பாக ஹார்திக் இன்று முதல் புது அத்தியாயத்தை தொடங்கப் போவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்காக உழைப்பேன் எனவும் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதமர் மோடி ஒட்டுமொத்த உலகத்திற்கே பெருமை எனவும் குறிப்பிட்டுள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சூழ்நிலையில், ஹார்திக் படேல் பாஜகவில் இணைந்துள்ளது காங்கிரஸுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.