விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலமாக மிமிக்கிரி கலைஞராக அறிமுகமானவர் ராமர். இதன்பின் விஜய் டிவியின் பல்வேறு நகைச்சுவை மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் தனது அபார நடிப்பின் மூலமாக அசத்தி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றார். அதேபோல் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மிமிக்ரி செய்து ராமர் பேசிய “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்கிற வசனம் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இதன் பலனாக தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார். இன்னும் ஒரு சில படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
விஜய் டிவி புகழ் ராமன் திருமணமானவர். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி என்கிற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். இவரது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள மேலூர் ஆகும். இதனை தவிர விஜய் டிவி ராமர் பற்றி வேறு எந்த தகவலும் ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாது. இந்த நிலையில் ராமர் ஒரு அரசு அதிகாரி என்ற தகவலும் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது விஜய் டிவி ராமர் உடன் மதுரை எம்பி வெங்கடேசன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு அழகான ஒரு விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.
அதாவது கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடக்கும் ஆய்வின்போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய் டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன் என மதுரை எம்பி வெங்கடேசன் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வளவு நாட்களாக டிவி நடிகர் என மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவர் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதேசமயம் ராமருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.