தாய்லாந்து நாட்டில் தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் மீன் துள்ளி குதித்து சிக்கி கொண்டது.
தாய்லாந்து நாட்டின் பாட்தலங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க ஒருவர் சென்றுள்ளார். இவர் நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்தார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் அந்த நம்பரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது. இந்த 5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்துள்ளது. ஆனால், குறுகலான பகுதியில் அந்த மீனால் வெளியே வர முடியவில்லை. மேலும் தொண்டைக்கும், சுவாச குழிக்கும் இடையில் அந்த மீன் சிக்கி கொண்டது.
இதனால் பிராணவாயு செல்லும் வழி அடைக்கப்பட்டு அந்த நபருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை அடுத்து எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. அந்த எக்ஸ்ரேயில் மீன் சிக்கி இருந்த சரியான இடம் கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இது குறித்து மருத்துவமனையின் அதிகாரி செர்ம்ஸ்ரீ பாத்தோம்பனிகிராட் கூறியதாவது, “நீரில் இருந்து துள்ளி குதித்து ஒருவரின் தொண்டையில் மீன் சிக்கிய சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு. இதற்கு முன் இதுபோன்ற விசயங்களை நான் கேள்விபட்டதே இல்லை.
எங்களது நோயாளியின் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் மருத்துவர்கள் செயல்பட்டுள்ளனர். மேலும் அவரை காப்பாற்றிவிட்டனர்” என அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், தாய்லாந்து நாட்டில் ஆவோ டான் கூ பீச்சில், நீச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுற்றுலா வாசியான நொப்படோல் ஸ்ரீங்கம் என்பவரின் தொண்டையில் ஊசி மீன் ஒன்று குத்தியது. இதனால் அவரது நிலைமை மோசமாக உள்ளது.