விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மற்றும் பொது குறைபாடு உள்ள 566 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது” விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டதில் 8544 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் பொது குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. அதில் 489 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் பொது குறைபாடு இருப்பதும், 77 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளுக்கு அந்த வட்டார பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் விருதுநகர் ஆரம்ப மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தையின் உயரம், எடை ஆகியவற்றை அளவின் அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.