பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் ஆனைமலை அருகில் நடந்த விபத்தில் பைக் மோதியதில் 3 பேர் உயிரிழந்தார்கள். இந்நிலையில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகனாந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், அலுவலர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் பேசியதாவது, கிணத்துக்கடவு, ஆனைமலை, பொள்ளாச்சி பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் 34 விபத்துக்கள் நடந்துள்ளது. அதில் 40 பேர்கள் உயிரிழந்துள்ளார்கள். 144 பேர் காயம் அடைந்து உள்ளார்கள். எனவே பெற்றோர்கள் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை வண்டி ஓட்ட அனுமதிக்க கூடாது.அதிக குதிரை திறன் கொண்ட வண்டிகளை வாங்கிக் கொடுக்காதீர்கள். அதிவேகமாக ஓட்டிச் செல்வதால் மற்ற வண்டிகள் மீது மோதி விபத்து ஏற்படுகின்றது. ஹெல்மெட் அணிவது மிகவும் அவசியம். ஹெல்மெட் அணிந்தால் தலையில் ஏற்படும் காயங்களை தவிர்க்கலாம். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
மேலும் விடுமுறை தினங்கள், பண்டிகை காலங்களில் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகிறது. பைக்கில் குழந்தைகள், பெண்களை பின்னால் உட்கார வைத்து செல்கின்றபோது கவனமாக ஓட்டிச் செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டும், மது போதையிலும் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வண்டிகளை இயக்க வேண்டும். அதனால் ஏற்படும் விபத்து, உயிர் சேதம், பொருள் சேதம் அனைத்தையும் தவிர்க்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தார்.