வாகன சோதனையின்போது தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 11 பவுன் நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள சித்தோடு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. இந்த குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி சித்தோடு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் நேற்று மாலை சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையிலான காவல்துறையினர் சித்தோடு பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டிருக்கும் போது அந்த வழியாக பைக்கில் இரண்டு பேர் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வேல்வார்கோட்டை பகுதியில் வசித்த 29 வயதுடைய தவீப் ராஜா என்பதும், கோவை வேலாண்டிபாளையம் தடாகம் பகுதியில் வசித்த 23 வயதுடைய முகில் என்பதும், இவர்கள் 2 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சித்தோடு பகுதியில் வசித்த மோகனசுந்தரம். இவருடைய மனைவி கிருஷ்ணனுன்னி. இவர்கள் 2 பேரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது தவீப் ராஜாவும், முகிலும் அவர்களை தடுத்து நிறுத்தி கிருஷ்ணனுன்னி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்கள்.
அதேபோன்று பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த சுகந்தி என்பவர் கடந்த மாதம் பணியை முடித்துவிட்டு பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது கங்காபுரம் தனியார் கம்பெனி அருகில் வரும்போது அவருடைய கழுத்தில் கிடந்த 8 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தவீப் ராஜாவையும், முகிலையும் கைது செய்து அவர்களிடமிருந்து 11 பவுன் நகையை மீட்டனர். மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக்கையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.