திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளி வந்து மீண்டும் கைவரிசையை காட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 9 1/2 பவுன் நகையை மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தெருவில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளி சகாய செல்வராஜன்(40). இவருடைய மனைவி டெல்வின். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று டெல்வின் பீரோவில் இருக்கின்ற 9 1/2 பவுன் நகையை பார்த்துள்ளார். ஆனால் அங்கு நகை இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டெல்வின் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதை யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவருடைய கணவர் சகாய செல்வராஜ் இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தேவசகாயம் மவுண்ட் நடு தெருவில் வசித்த ஜோஸ் என்பவருடைய மனைவி 30 வயதுடைய ரெப்சி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் நகை திருடியது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ரெப்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகையை திருடி விட்டு சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அதேபோன்று கட்டிடத் தொழிலாளி வீட்டில் திருடி உள்ளார். அதாவது சகாய செல்வராஜன் வீட்டில் நெருங்கி பழகி பேசி நடித்திருக்கிறார். அதன்பின் ஆளில்லாத நேரத்தில் அவருடைய வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் திருடிய நகையை வடக்கன்குளம் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன்பின் காவல்துறையினர் நகையை அங்கு சென்று மீட்டனர். இதனை அடுத்து ரெப்சியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.