மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் முருகன் கோவில் தெருவில் விவசாயியான வெங்கடேசன்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாயக்கண்ணன் என்பவருடன் கள்ளக்குறிச்சி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் அருகே இருக்கும் சர்வீஸ் சாலையில் இருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசன், மாயக்கண்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.