Categories
உலக செய்திகள்

“அமெரிக்க குழந்தைகளுக்கு இப்படி ஒரு நிலைமையா”….. வருத்தம் தெரிவித்த அதிபர் ஜோ பைடன்….!!

குழந்தைகளுக்கான புட்டிப்பால் பற்றாக்குறையை தீர்க்க உடனடி பால் பவுடர் இறக்குமதிக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். 

அமெரிக்கா நாட்டில் குழந்தைகளுக்கான பால் பவுடர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை கவனத்திற்கு கொண்டு  வரப்படவில்லை என அந்நாட்டின் அதிபர் பைடன்  தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தாய்ப்பால் கிடைப்பது இல்லை புட்டிப்பால் தான் தரப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் புட்டிப்பால் தயாரிக்க பயன்படும் பால் பவுடருக்கு  எப்போதும் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக இங்கு புட்டிப்பால் பவுடருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகத்துக்கே பல உதவிகளை செய்து  கொண்டிருக்கும் அதிபர் பைடன், தனது நாட்டில் இது போன்ற சிறிய பிரச்சனையில் கோட்டை விட்டு இருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதுபோன்ற  குறை அமெரிக்காவில் ஏற்பட்டு இருக்கிறது என்ற விவரம், சமீபத்தில்தான் வெளி வந்துள்ளது.

அமெரிக்காவில் மிச்சிகன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  உள்ள அபோட் ஊட்டச்சத்து நிறுவனம் தயாரித்து வழங்கிய  பால் பவுடரை உட்கொண்ட 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் பாக்டீரியா இருந்ததை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து அந்நாட்டு குழந்தைகளுக்கு வழங்கும் பால் பவுடர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இதன் பாதிப்பு தெரியவில்லை என்றாலும், மே 2ம் வாரத்துக்கு பிறகு நிலைமை மோசமாகியுள்ளது.

இந்த விவகாரம் அதிபர் பைடனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரீன் ஜான் பியரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேசிய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு ஆணையம் இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அமெரிக்க நாட்டு குழந்தைகளுக்கான பால் பவுடர் லண்டன், ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து  ஜூன் 9ம் தேதி முதல், 3 வாரங்களுக்கு 37 லட்சம் 250 மிலி பால் பவுடர் பாட்டில்களும் ஆஸ்திரேலியாவில் இருந்து 46 லட்சம் 250 மிலி பாட்டில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை பற்றி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், குழந்தைகள் பால் பவுடர் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களின் கூட்டத்துக்கு அதிபர் பைடன் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அபோட் ஊட்டச்சத்து நிறுவனம் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்துக்குப் பிறகு பைடன் அளித்த பேட்டியில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பிரச்சனை தீவிரமடையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்லாதது வருத்தத்திற்குரியது. ஒரு தந்தையாக, தாத்தாவாக குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பொருளான பால் பவுடர் இல்லை என்றால் ஏற்படும் மன வருத்தம் எப்படி பட்டது என்று எனக்கு நன்றாக தெரியும். மேலும் ஆபரேஷன் ப்ளை பார்முலா மூலம் குழந்தைகளுக்கான பால் பவுடரை இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |