முதல்வர் காரை முந்திய குற்றத்திற்காக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பணி முடிவடைந்ததும் சென்னை கோட்டாரில் இருந்து தன்னுடைய காரில் கிளம்பினார். இந்த காரை பின்தொடர்ந்து முதல்வரின் பாதுகாவலர்களும் காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் நேப்பியர் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது முதல்வரின் காரை முந்திக்கொண்டு ஒரு வாலிபர் ஆக்டிவா வாகனத்தில் சென்றுள்ளார். இந்த வாலிபர் முதல்வரின் காரை முந்தி செல்வதற்கு முயற்சி செய்துள்ளார். இவரை பாதுகாவலர்கள் பலமுறை எச்சரித்தும் கேட்காததால் அங்கிருந்த போக்குவரத்து காவலர்களிடம் புகார் கொடுத்துள்ளனர்.
உடனே போக்குவரத்து காவலர்கள் வாலிபரின் வாகனத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் வாலிபர் நிற்காமல் சென்றதால் போக்குவரத்து காவலர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர். அதன்பின் நடத்திய விசாரணையில் வாலிபர் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பதும், தி நகர் பகுதியில் உள்ள ஒரு ஆள் இல்லாத வீட்டில் இருந்த ஆக்டிவா வண்டியை திருடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து வாலிபரை காவல்துறையினர் கைது செய்து கோட்டார் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.