4 வயது சிறுமி பாம்பை கையில் பிடித்து விளையாடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உபதலை ஆலோரை குடியிருப்பு பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய ஸ்ரீநிஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஸ்ரீநிஷா தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வீட்டின் வாசலில் வந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பாம்பை கண்டு அச்சப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமி ஸ்ரீநிஷா மட்டும் அந்த பாம்பை பிடித்து கையில் வைத்து விளையாடினார்.
இதனை பார்த்த ஸ்ரீ நிஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சிறுமி ஸ்ரீ நிஷா அந்த பாம்பை பொந்துக்குள் பாதுகாப்பாக விடுத்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பாம்பினை கண்டு பயந்து ஓடும் மக்களிடையே அதனை பிடித்து பாதுகாப்பாக கொண்டு விட்ட சிறுமியை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.