தந்தையை கொலை செய்த வாலிபர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதுண்ணாங்குடி பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பெனிஸ்கர் என்ற மகனும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மகாராஜன் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மகாராஜனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பெனிஸ்கர் தனது தந்தை மகாராஜனிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறும், அதனை வங்கியில் அடகு வைத்து கடன் வாங்குவதாகவும் கூறியுள்ளார். ஆனால் மகாராஜன் வீட்டை எழுதி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெனிஸ்கர், முருகம்மாள், மகள் ரேவதி ஆகிய 3 பேரும் சேர்ந்து மகாராஜனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.