மகனின் ஆசைக்காக ஒரு வருடம் கஷ்டப்பட்டு மெக்கானிக் தந்தை மொபட்டை தயாரித்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி நச்சினாம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு செல்வராணி என்ற மனைவியும் கீர்த்திகா, கேஷிகா என்ற மகள்களும் மோகித் என்ற மகனும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் சென்ற ஒரு வருடத்திற்கு முன்பாக மகன் மோகித் தந்தை தங்கராஜிடம் மோட்டார் சைக்கிள் வேண்டும் என கேட்டு இருக்கின்றான். இதையடுத்து தங்கராஜ் தனது மகனுக்கு தானே ரேஸ் பைக் வடிவிலான மொபட்டை தயாரித்துத் தர முடிவு செய்ததையடுத்து சென்ற ஒரு வருடத்திற்கு முன்பாக பழைய மொபட்டை விலைக்கு வாங்கி சிறுவர்கள் ஓட்டும் வகையில் வடிவமைக்க தொடங்கினார்.
பின் தயாரித்து தன் மகனுக்கு பரிசாக வழங்கினார். இந்நிலையில் ஓமலூர் அருகே சாலையில் தனது மகன் மோகித்துடன் தங்கராஜ் மொபட்டை பின்னால் அமர்ந்து சோதனை ஓட்டம் சென்று பார்த்துள்ளார். இதை உறவினர் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது விதிமுறை மீறலாகும்.
இந்நிலையில் சிறுவனின் தந்தை அதற்கு உறுதுணையாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி சிறுவனின் தந்தை தங்கராஜ் கூறியுள்ளதாவது, சிறுவர்கள் ஓட்டும் வகையில் சிறிய அளவிலான மொபட்டை தயாரித்துள்ளேன். இதனை சாலையில் ஓட்ட அரசு மற்றும் போக்குவரத்து துறையினர் அனுமதி தர வேண்டுமா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. இதற்கு அனுமதி கிடைத்தால் பல மொபட்டுகளை சிறுவர்கள் ஓட்டும் வகையில் தயாரிக்க முடியும். மகனுக்காக ஒரு வருடம் சிரமப்பட்டு உருவாக்கிய மொபட் தற்போது வீட்டில் பத்திரமாக வைத்து இருப்பதாக கூறியுள்ளார்.