Categories
கிரிக்கெட் விளையாட்டு

#U19CWC : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசி.!

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் லீக் காலிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி நேரடியாக சூப்பர் லீக் அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் லீக் காலிறுதிப் போட்டிகள் நடந்துவருகின்றன. இதன் இன்றைய போட்டியில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் மெலியஸ் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

இதையடுத்து பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிர்க் மெக்கென்சி 99 ரன்களும், கெல்வோன் ஆண்டர்சன் 33 ரன்களும், மோரிஸ் 31 ரன்களும் எடுத்ததால் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 238 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பாக கிறிஸ்டியன் கிளார்க் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்

இறுதிவரை காயத்துடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிர்க் மெக்கன்சியால் நடக்க முடியாதபோது, நியூசிலாந்து வீரர்கள் அவரைத் தூக்கிச் சென்ற சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியது.

பின்னர் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. தொடக்க வீரர் வொய்ட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, பின்னர் ரைஸ் – ஃபெர்குஸ் இணை சிறிது நேரம் தாக்குப்பிடித்தது.

இவர்களில் ரைஸ் 26, ஃபெர்குஸ் 29 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ஜெஸ்ஸி 6 ரன்களில் வெளியேறியதால் நியூசி. 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் ஆட்டம் பரபரப்பானது.

பின்னர் குயூன் சுன்டே – சிமோன் கீன் இணை விரைவாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. குயூன் 32 ரன்களிலும், சிமோன் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வீலர் 16, அசோக் 0 அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 35 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது.

பின்னர் வந்த ஜோய் ஃபீல்டு – கிறிஸ்டியன் கிளார்க் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினர். இந்த இணை விக்கெட்டுகளைக் கொடுக்காமல் 49 ஓவர்களில் 232 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட அதனை நான்கு பந்துகளில் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதால் நியூசிலாந்து அணி நேரடியாக சூப்பர் லீக் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது. இந்தப் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி 42 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவிய கிளார்க் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

Categories

Tech |