மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஜீவாநகர் பகுதியில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் அவருடைய நண்பர்களான மோகன்ராஜ், மணிகண்டன், குணா, பிரவீன் குமார், அறிவு பிரகாஷ் ஆகியோருடன் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது சுரேஷ் தனது நண்பர்களிடம் தன்னுடைய பேச்சுக்கு நீங்கள் அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என்று அதிகாரமாக கூறியுள்ளார். இதனால் நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார் உரிமையாளர் கண்டித்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தகராறு முற்றியதில் 5 பேரும் சேர்ந்து சுரேஷை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதனைப் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுரேஷை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொடன்னு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சுரேஷின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மோகன்ராஜ், குணா, மணிகண்டன், பிரவீன் குமார், அறிவு பிரகாஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.