ஓய்வு பெற்ற டிரைவரை ஜீப்பில் அமரவைத்து முதன்மை கல்வி அதிகாரி ஜீப் ஓட்டிச்சென்று வீட்டில் அழைத்து சென்றுவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த 32 வருடங்களாக முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவுக்கு சக்கரபாணி என்பவர் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது சக்கரபாணி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா தலைமையில் சக்கரபாணிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
அந்த விழா முடிந்ததும் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா டிரைவர் சக்கரபாணியை யாரும் எதிர்பாராத வகையில் தான் வழக்கம்போல் பயணம் செய்யும் இருக்கையில் அவரை அமர வைத்து கிருஷ்ணபிரியா ஜீப் ஓட்டிக்கொண்டு சக்கரபாணியின் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டார். இதனால் இன்ப அதிர்ச்சியில் திகைத்து போன டிரைவர் சக்கரபாணி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.