வெங்கல் அருகே ரத்த காயத்துடன் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள மூலக்கரை கூட்ரோடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் நெற்றி, உதடுகள் போன்ற பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விசாரணையில் இறந்து கிடந்தவர் பூவரசன் என்பதும் திருவள்ளூர் அருகே உள்ள புங்கத்தூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு பிரியா என்ற மனைவியும், 1 1/2 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 4 வருடங்களுக்கு பூவரசன் ராம தண்டலம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் மூலக்கரை கூட்ரோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பூவரசனின் மனைவி பிரியா தனது கணவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், கொலையாளிகளை பிடிக்க கோரி வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.