தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், வருகின்ற 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவிகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்லும் வாகனங்கள்,சரியான முறையில் பராமரிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்த ஆய்வு நாமக்கல்லில் உள்ள காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அப்போது ஒவ்வொரு வாகனங்களிலும் முதலுதவி மருத்துவ பெட்டி உள்ளதா? மற்றும் ஓட்டுநர் தகுதிக்கான உரிமை பெற்றுள்ளாரா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பேருந்தில் படிக்கும், தரைக்கும் உள்ள அளவு, தீயணைப்பு கருவிகள், விபத்து மற்றும் அவசர காலங்களில் வெளியேறும் வகையிலான அவசர வழி அமைக்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆய்விற்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 559 வாகனங்கள் கொண்டு வரப்பட்டது. அதில் சில பேருந்துகளில் குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்ததையடுத்து, உடனே சரி செய்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இதன் பின், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது, இன்று நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 559 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று, சீட், அவசர வழி, தீயணைப்பான் கருவி அனைத்தும் உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 559 வாகனங்களில் 168 வாகனங்களை தவிர அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால், அதை சரி செய்த பிறகே, வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படும். இந்நிலையில் விதிமுறைகளை கடைப் பிடிக்காத பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி இல்லை. இவ்வாறு கலெக்டர் ஸ்ரேயா பி சிங் கூறியுள்ளார்.