செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மக்களுக்கு பாதுகாப்பில்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி சொல்கிறேன். சட்டமன்றத்திலும் இந்த கருத்தை வலியுறுத்தி சொன்னேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதுபோல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆகவே இந்த அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் காவல்துறையை வைத்திருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முறையாக அந்த துறையை கவனிக்காத காரணத்தால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து, சிதைந்துபோய், சந்தி சிரிக்கும் அளவுக்கு இருந்துகொண்டிருக்கிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்திலேயே இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற போதும் சரி, அம்மா மறைவிற்குப் பிறகும் சரி, சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது . யார் குற்றம் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தோம். அரசில் அரசியல் கலக்கவில்லை.
இன்றையதினம் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே காவல்துறையில் தலையிட்டு குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டிய நிலையை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இதனால் தான் குற்றம் கொஞ்சம் கூட குறையவில்லை.
காவல்துறையின் காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. ஆகவேதான் கொலைகளும், கொள்ளைகளும் , செயின் பறிப்பு அதிகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.சட்ட ஒழுங்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு அடியோடு சிதைந்து விட்டது. போதைப்பொருள் கஞ்சா விற்காத இடமே இல்லை.
கிராமத்திலிருந்து நகரம் வரை எங்கே பார்த்தாலும் கஞ்சா விற்பனை செய்யபடுகிறது. அதையும் இந்த அரசு தடுத்து நிறுத்த முடியாத ஒரு சூழல் இருக்கிறது. அதனால் காவல்துறை முழுமையாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது. இது இப்படியே போய்க் கொண்டிருந்தால் தமிழ்நாடு போதைப்பொருள் உள்ள மாநிலமாக மாறி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.