தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சொகுசு கப்பல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் என மொத்தம் 2 பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது.
முதல்முறையாக இத்தகைய திட்டம் தொடங்கப்படவுள்ளதால் பலரும் மிக ஆர்வமாக உள்ளனர். நாட்டின் பல்வேறு துறைமுகத்தில் சேவை வழங்கிவரும் இந்த கார்டெலியா (Cordelia) கப்பல் நிறுவனம், சென்னையிலும் தனது சேவையை தொடங்குகிறது. 2 வகையான பயணத்திட்டங்களுடன், நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அம்சங்களுடனும் சேவை வழங்க வருகிறது கார்டெலியா.
2 நாள் திட்டத்திற்கு ஒரு நபருக்கான ஆரம்ப கட்டணம் ரூ.22,915. அது அறைகளின் அளவு, வசதிகள், கடல் அழகை ரசிக்கும் வகையிலான அமைப்பு என 29,568 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் 80,000 ரூபாய் என மாறுபடுகிறது. 5 நாள் திட்டத்திற்கு 54 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.37 லட்ச ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் உணவகங்கள், விளையாட்டு தளங்கள், திரையரங்கம், விருந்து, கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் ஆழ்கடல் பகுதியில் திருமணங்கள், அலுவலக மீட்டிங்குகளும் நடத்தலாம்.