சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். உடல்நல பாதிப்பு, உயிரிழப்புகள் என்றால் பொருளாதார இழப்பு என அனைத்து தரப்பு மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட மூன்றாவது அலையில் இருந்து விரைவில் விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சில மாதங்களாக அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. பள்ளிகளிலும் தேர்வுகள் நிறைவடைந்து அடுத்த கல்வி ஆண்டு இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ளது.
இந்த சூழலில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் முக்கியமாக சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தொற்று பரவ தொடங்கியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “சென்னையில் 9, 13 வது மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், விஐடி போன்ற இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து மாணவர்கள் வருவதால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் குரங்கு காய்ச்சல் பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். ஜூன் மாதத்தில் நான்காவது அலை தொடங்கும் என மருத்துவர்கள் கூறி வந்த நிலையில் தற்போது அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மற்றொரு கொரோனா அலையா என்று மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.