கரும்பு பயிர் காப்பீடு செய்வதற்கு வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று வேளாண்மை இணை இயக்குனர் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது, நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்பாராதவிதமாக இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படுகின்ற வகையில் விவசாயிகளுக்கு நிதி உதவி கொடுக்கவும், நிலையான வருமானம் கிடைப்பதற்கும், விவசாயத்தை நிலைபெறச் செய்வதற்கும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் பயிரிடப்படும் கரும்பு பயிர் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 2500 செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். மேலும் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதனையடுத்து விவசாயிகள் கடைசி வரை காத்திருக்காமல் உடனே கரும்பு பயிருக்கு காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் வணிக வங்கிகள், பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றை அணுகலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் நில உரிமை பட்டா, அடங்கல், ஆதார நகல், நடப்பில் இருக்கின்ற வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்துடன் உரிய தவணை தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்ய கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து விதைப்பு சான்று பெற்று காப்பீடு செய்யலாம். இது குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருக்கின்ற வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். உழவன் செயலிலிருந்தும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.