கண்டெய்னர் லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூரில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு வண்டலூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வண்டலூர்- மிஞ்சூர் 400 அடி சாலை வரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிப்பர் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் இடிபாடுகளில் சிக்கி டிப்பர் லாரி ஓட்டுநரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு(47) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த ஓட்டுநரின் உடலை மீட்டனர். அதன்பிறகு வெங்கடேஸ்வரலுவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.