கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள தனகனந்தல் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். அவரது மனைவி பத்மாவதி. செல்வராஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் செல்வராஜின் இளைய மகள் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் நடத்திவரும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஸ்வரி தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையை போக்க கூடிய வகையில் செல்வராஜ் உருவத்தில் மெழுகுச் சிலையை உருவாக்க முடிவு செய்தார். இதற்கு தாய் பத்மாவதியும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி ரூ.5 லட்சம் செலவில் செல்வராஜ் மெழுகு சிலை தத்ரூவமாக உருவாக்கப்பட்டது.
செல்வராஜின் மெழுகு சிலைக்கு பட்டு வேஷ்டி-சட்டை அணிந்து அமர்ந்து இருப்பது போல் உருவாக்கப்பட்டது. அந்த சிலை முன் நேற்று புரோகிதர்களைக் கொண்டு திருமண சடங்கு நடைபெற்றது. தந்தை செல்வராஜ் உருவ சிலை அருகில் தாயார் பத்மாவதி அமர, பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அதன்பிறகு மகேஸ்வரி தந்தையின் உருவ மெழுகு சிலை முன் நின்று திருமணம் செய்து கொண்டார். மேலும் தந்தையை நினைவு ததும்பலில் மகேஸ்வரி தந்தையின் மெழுகுச் சிலையை உற்று பார்க்க அவரது கண்கள் கலங்கியது. உடனே மகேஸ்வரியை திருமண வீட்டார் அனைவரும் சமாதானபடுத்தினார். இந்த இந்தச் சம்பவத்தை பார்த்த விருந்தினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.