காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் சேர்த்து மொத்தம் 20,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பக்கத்து ஊர்களுக்கு சென்று திரும்பி வருவதற்கு போதிய அளவு போக்குவரத்து வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுநாள் வரையிலும் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூடுவாஞ்சேரி வழியாக நீலமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் தான் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பயணம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காகவும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டும் ஆதனூர் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பாக 7 ஆட்டோக்கள் தற்போது வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ பேட்டரி மூலம் இயங்குகிறது. ஒரே நேரத்தில் பின்னிருக்கையில் 4 பேர் அமர்ந்து பயணிக்க முடியும். இந்த முயற்சி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காலை 7 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை இயக்கப்படுகிறது. ஆதனூர் ஊராட்சி சேர்ந்த மக்கள் தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை நகலை ஊராட்சி மன்றத்தில் கொடுத்தால் ஆட்டோவில் பயணிப்பதற்கான அடையாளஅட்டை கொடுக்கப்படும். இதைக் காட்டி மக்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர்.