அண்மையில் தான் கோவை மாநகராட்சிக்கு புதிதாக ஆணையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, பிரதாப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி அரசு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் சில நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்த பின், நேற்றைய தினம் புதிய ஆணையாளர் பிரதாப்பை மாநில தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
இதையடுத்து தமிழகத்தில் 5-முறை முதல்வராக இருந்த கலைஞர் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் மற்றும் இந்நிகழ்வை சிறப்பாக கொண்டாடிய கோவை மாநகராட்சி ஆணையாளருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் கலைஞரின் புத்தகம் ஒன்றும், ஆணையாளருக்கு பரிசாக வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஆணையாளரிடம் சில முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். அதாவது, கோவை மாநகராட்சியில் சுமார் 10 வருடங்களுக்கும் மேல், தனியார் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்ற நிலையில், அவர்களை தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதால், அதற்கான வேலைகளையும், மாநகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.
மேலும் அதுமட்டுமின்றி தூய்மை பணியாளர்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு, ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி காலத்தில் தூய்மை பணியாளர்கள் கூட்டுறவு வங்கியில் நடைபெற்றுள்ள ஊழல்களை கண்டறிதல், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அணிவது பற்றிய விழிப்புணர்வை கட்டாயமாக்கி அவர்களது உடல் நலனில் அக்கறை காட்டுதல் போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கடந்த 2-மாதங்களுக்கு முன், வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டதால் உயிரிழந்த சிவகாமி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இந்த உயிரிழப்பிற்கு காரணமான மாநகராட்சி அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.