இந்தியா-செனகல் நாடுகளுக்கு இடையேயான தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, செனகல் சென்றுள்ளார். இதனை அடுத்து இந்தியா-செனகல் வணிக நிகழ்வில் அவர் உரையாற்றினாா்.
இதில் அவர் பேசியதாவது, “கொரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும், கடந்த 2021-22ஆம் ஆண்டில் இந்தியா- செனகல் நாட்டிற்கு இடையே பொருளாதார மற்றும் வா்த்தக உறவுகளில் வரவேற்க தக்க வளா்ச்சியுள்ளது. கொரோனா காலத்திலும் சுமாா் 1.65 பில்லியன் டாலா்கள் வா்த்தகம் நடந்துள்ளது. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாக வளரும் என நம்பிக்கை இருக்கின்றது.
இந்தியாவில் இருந்து ஜவுளி, உணவுப் பொருட்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் செனகலுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பாஸ்பாரிக் அமிலம் மற்றும் முந்திரியின் மூலப்பொருட்கள் செனகலில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக வருகின்ற ஜூன் 4 முதல் ஜூன் 7 வரை கத்தார் நாட்டிற்கு செல்ல உள்ளாா்.