சென்னையில் திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 2 ஜியால் முடிவுக்கு வந்த திமுக ஆட்சி தற்போது ஜி ஸ்கொயரால் முடிவுக்கு வரப்போகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். 23,8800 ஊட்டச்சத்து தொகுப்புகளை தமிழக அரசு வாங்குகிறது. 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பில் தனியார் ஹெல்த் மிக்ஸ் பொருளுக்கு பதிலாக ஆவின் பொருளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. பின்னர் இந்த முடிவு மாற்றப்பட்டது.
திமுக ஆடிட்டர் சண்முகசுந்தரம், அண்ணாநகர் கார்த்தி ஆகியோர் குழுவில் இருந்த உறுப்பினர்களை மிரட்டி, ஆவின் பொருளுக்கு பதிலாக தனியார் பொருளை சேர்க்க வைத்துள்ளார் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம் அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சண்முகசுந்தரம், அண்ணாநகர் கார்த்தி ஆகியோர் அரசில் தாக்கம் ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக தற்போது CMDA மாறியிருக்கிறது. பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு 8 நாட்களில் DDCP, மத்திய அரசின் ரேரா உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்துள்ளது. முதல்வரின் உறவினர்கள் பலரும் ரேரா கிரடாய் அமைப்புகளில் வந்துவிட்டனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஆன்லைன் மூலம் மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல் வழங்கப்படும் என ஒரு அரசாணையை வெளியிடுகின்றனர். எப்பவெல்லாம் ஜி ஸ்கொயர் அப்ரூவலுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனரோ அதற்கு ஒருமணி நேரம் முன்னர் மட்டுமே இந்த லிங்க் ஓபன் ஆகும். அவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் ஒரு மணி நேரத்தில் இந்த லிங்க் இயங்காது. ஜி ஸ்கொயருக்கு மட்டுமே இந்த ஆன்லைன் லிங்க் இயங்குகிறது எனவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஜி ஸ்கொயர் பெயர் வெளியே தெரியவந்ததால் தற்போது 6 புதிய நிறுவனங்களை தொடங்கியுள்ளனர் . இதில் முதல்வர் மருமகன் சபரீசன், மகள் செந்தாமரை, கார்த்தி தலைமை இயக்குநராக உள்ளனர். அமைச்சர் முத்துசாமி இதற்கு பதில் சொல்ல வேண்டும். 2 ஜி யால் முடிவுக்கு வந்த ஆட்சி இப்போது ஜி ஸ்கொயரால் முடிவுக்கு வரப்போகிறது’ என தெரிவித்துள்ளார்.