பென்சன் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பிரென் டெகா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீர்ப்பாசனத் துறையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரென் டெகாவின் 2-வது மனைவி குடும்ப பென்சன் கேட்டு கவுகாத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் தனக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக கூறி குடும்ப பென்சன் கேட்டிருந்தார். இதனையடுத்து பிரென் டெகாவின் முதல் மனைவியும் நீதிமன்றத்தில் குடும்ப பென்சன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சஞ்சய்குமார் மேதி முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்து மதத்தில் 2 மனைவிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் என கூறினார். அதாவது அரசு ஊழியர் பிரென் டெகா இந்து மதத்தைச் சேர்ந்தவர். இவர் 2 பேரை திருமணம் செய்ததால்தான் குடும்ப பென்சன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் நீதிபதி இந்து மதத்தில் 2 பேரை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என கூறினார். மேலும் வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிபதி குடும்ப பென்சன் முதல் மனைவிக்குத்தான் வழங்கப்படும் எனவும், 2-வது மனைவியின் குழந்தைகள் அனைவரும் வயது வந்தவர்கள் என்பதால் குடும்ப பென்சன் வழங்க முடியாது எனவும் கூறி தீர்ப்பளித்தார்.