கத்தார் பிரதமருடன் வெங்கையா நாயுடு நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
3 நாடுகளில் சுற்று பயணத்தில் இருக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று முன்தினம் கத்தார் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகரான தோகா விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அவர் அந்த நாட்டு பிரதமரும், உள்துறை மந்திரியுமான ஷேக் காலித் பின் கலிபா பின் அப்துல்அசிஸ் அல் தனியை சந்தித்துள்ளார். அப்பொழுது இரு தலைவர்களின் தலைமையில் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடுவின் இந்த பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, கத்தாரை சேர்ந்த பல்வேறு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், வர்த்தக வட்டமேஜை நிகழ்வு ஒன்றிலும் உரையாற்றுகிறார். மேலும் இந்தியா-கத்தார் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50-வது ஆண்டை கொண்டாட இரு நாடுகளும் தயாராகி உள்ள நிலையில், வெங்கையா நாயுடுவின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகின்றது.