பல கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காகவும், திறமையான ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பல பெரு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், சிறப்பு விடுமுறை ஆகிய பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் தங்களது ஊழியர்கள் ராஜினாமா செய்வதற்கு 77 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வழங்குகிறது.
இதில் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லேட்டிஸ் (Lattice) நிறுவனம் தங்களது ஊழியர்கள் ராஜினாமா செய்வதற்கு 1 லட்சம் டாலர் வழங்குகிறது. இவற்றில் 1 லட்சம் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 77.66 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும். எனினும் இந்த 1 லட்சம் டாலர் பணத்தை கொண்டு அவர்கள் ஒரு வருடத்திற்குள் சொந்தமாக தொழில் துவங்க வேண்டும். இதற்கு ஒரு கண்டீஷனும் லேட்டிஸ் நிறுவனம் போட்டுள்ளது.
அந்த வகையில் லேட்டிஸ் வழங்கும் 1 லட்சம் டாலரை வைத்து துவங்கும் தொழில் நிறுவனத்தில் 2 சதவீத பங்கு அந்நிறுவனத்தை சேரும். இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே ராஜினாமா செய்யும் போது 1 லட்சம் டாலர் நிதி வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக லேட்டிஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் ஜாக்ஆல்ட்மன் மற்றும் எரிக் கோஸ்லோ இருவரும் கடந்த 2020 ஆம் வருடத்திலேயே “Invest in your People” என்ற முதலீட்டு நிதியை தொடங்கினர். இந்நிதியில் இருந்தே ஊழியர்களுக்கு 1 லட்சம் டாலர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.