கோவையில் உள்ள சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவையில் அனைத்து பொது இடங்களிலும் ரகசிய கண்காணிப்பு படையினர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று கோவை ரயில் நிலையம் அருகே காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான ஒருவரை வழிமறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணமாக பதிலளித்ததைத் தொடர்ந்து அவரை சோதனையிட்டனர்.
சோதனையில், அவரிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த இளையராஜா(55) என்பதும், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரயில் மூலம் கோவைக்கு கஞ்சா கடத்திவந்தததும் தெரியவந்தது.
இதையடுத்து, இளையராஜாவைக் கைது செய்த காவல் துறையினர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கோவையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.