தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.1 லட்சம் திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பவானி நகர் பகுதியில் நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந் தேதி நாகலிங்கம் தந்து குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கன்னிராஜபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நாகலிங்கத்தின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் நாகலிங்கத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது நாகலிங்கத்துக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாகலிங்கம் செவ்வாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.