பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலச்செவலில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாள் தனது மகளை பார்ப்பதற்காக திருக்குறுங்குடிக்கு சென்றுள்ளார். நேற்று இசக்கியம்மாள் வீட்டிற்கு செல்வதற்காக திருக்குறுங்குடி பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்த பேருந்து திருக்குறுங்குடி சத்திரம் அருகே இருக்கும் திருப்பத்தில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக இசக்கியம்மாள் படிக்கட்டு வழியாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இசக்கியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த திருகுருங்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.