தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக மாநிலத்தில் வேலை வாய்ப்பு முகாம் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகின்றது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மற்றும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுய விவரக் குறிப்பு,கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குனர் கூறியுள்ளார். மேலும் தனியார் துறையில் வேலை கிடைத்துவிட்டால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.