தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்தியதால், தற்போது பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க விரும்புகின்றனர். அதனால் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே தனியார் பள்ளிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. ஆனால் அரசு பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை நடைபெற வில்லை. இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 5 வயதிற்குட்பட்ட மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதுடன் காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அதற்கு அனைத்து ஆசிரியர்களும் பேரணி ஒன்றை நடத்த வேண்டும். கோடை விடுமுறை முடிவதற்குள் இந்த பேரணி நடத்தி முடிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஓர் இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அப்பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
மேலும் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.