தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நெல்லை, குமரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், கரூர், திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி மற்றும் வேலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல்,தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.