ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். காதலர் தினம் என்பதால் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள படங்களே அதிகம் வெளியாகின்றன. இந்த ஆண்டு அப்படி வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை கீழே காண்போம்.
ஓ மை கடவுளே
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ மை கடவுளே’. முழுக்க முழுக்க காதல், திருமணம், கலாட்டா, காமெடி என்ற கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஃபிரண்ட்ஷிப் ஆன்தம் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
நான் சிரித்தால்
‘மீசைய முறுக்கு’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. தற்போது மூன்றாவது முறையாக சுந்தர்.சி தயாரிப்பில் ‘நான் சிரித்தால்’ படத்தில் ஆதி நடித்துள்ளார். காதல், நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகிறது.
அதோ அந்த பறவை போல
‘ஆடை’ படத்திற்கு பிறகு அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆதோ அந்த பறவை போல’. காட்டில் ஒரு கும்பலிடம் தனியாக சிக்கிக்கொள்ளும் இளம்பெண் அவர்களிடம் இருந்து எப்படி தப்பித்து மீண்டு வருகிறார் என்பதே படத்தின் கதை. சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களை அமலா பால் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தயாராகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சர்வர் சுந்தரம்
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’. இரண்டு வருடங்களாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதையடுத்து இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சந்தானத்தின் மற்றொரு படமான ‘டகால்ட்டி’ இன்று வெளியாவதால் மீண்டும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில் ஒரு வழியாக காதலர் தினத்தன்று அந்தப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்டு ஃபேமஸ் லவ்வர்
டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு இளம் ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக ரசிகைகளுக்கும் ஃபேவரைட்டாகியுள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘வேல்டு ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராஷிகண்ணா, இஸபெல் லெய்டி என்று நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். விஜய் தேவரகொண்டா படம் என்றாலே காதல், ரொமான்ஸ் இருக்கும் என்று அனைவரும் அறிந்த ஒன்றே. அதே போன்று தான் இப்படமும் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டே நைட்
‘கெட்டவன்’ படத்தை இயக்கிய என்.கே.கண்டி இயக்கியுள்ள படம் ‘டே நைட்’. 2018ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை, 2019ஆம் ஆண்டு புலனாய்வு செய்வது தான் கதையின் மையக்கரு. படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தை தவிர, மற்ற எல்லா கதாபாத்திரங்களும் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை என்று கூறப்படுகிறது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் காதலர் தினத்தில் வெளியாகிறது.
இதில் இடம்பெற்றுள்ள ஆறு படங்களில் எத்தனை படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவிக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்